தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் நடைபெறும் ஆண்டு விழாக்களில் நடிகர் விஜய்யின் திரைப்படப் பாடல்களை ஒளிபரப்பக் கூடாது எனத் தலைமை ஆசிரியர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் தற்போது அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழாக்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிகழ்ச்சிகளில் மாணவர்கள் பெரும்பாலும் நடிகர் விஜய்யின் பாடல்களுக்கு நடனமாடுவதையும், அவரது அரசியல் சார்ந்த பாடல்களை ஒளிபரப்புவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' (TVK) என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள நிலையில், அவரது பாடல்கள் மாணவர்கள் மத்தியில் அரசியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனக் கருதப்படுகிறது.
பள்ளி வளாகத்திற்குள் சினிமா மற்றும் அரசியல் பாடல்களைத் தவிர்த்து, கல்வி மற்றும் கலை சார்ந்த பாடல்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனத் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தடைக்கு விஜய் ரசிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். "பாடல்களுக்குத் தடை விதிப்பது மாணவர்களின் கலைத் திறமையை முடக்கும் செயல்" என அவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதேவேளை, பள்ளிகளில் ஒழுக்கத்தைப் பேண இத்தகைய கட்டுப்பாடுகள் அவசியம் என மற்றொரு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

0 Comments