Subscribe Us

விரிவுரையாளர் தயாளினி படுகொலை! மகளும் மருமகனும் அதிரடி கைது - பின்னணியில் அதிர்ச்சித் தகவல்கள்.

யாழ்ப்பாணம் சுண்டிக்குளி பகுதியில் வசித்து வந்த பெண் விரிவுரையாளர் தயாளினி என்பவர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டு, அவரது சடலம் தனங்கிளப்பு பகுதியில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலை தொடர்பாக அவரது 19 வயது மகளும், 21 வயது மருமகனும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 17-ஆம் திகதி நள்ளிரவு விரிவுரையாளரின் வீட்டிற்குள் கூரையைப் பிரித்து இறங்கிய மருமகன் திவாகர், அங்கு மறைந்திருந்துள்ளார். 18-ஆம் திகதி அதிகாலை 1:30 மணியளவில், விரிவுரையாளர் தூங்கிக்கொண்டிருந்த போது, அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

​விவாகரத்து வழக்கு நிலுவையில் இருந்த போதிலும், இன்ஸ்டாகிராம் மூலம் திவாகர் தனது மனைவியுடன் (விரிவுரையாளரின் மகள்) தொடர்பில் இருந்துள்ளார். தாயைக் கொன்றால்தான் தாம் சேர்ந்து வாழ முடியும் என மகள் யோசனை கூறியதாகத் திவாகர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

​கொலையின் பின் சடலத்தைப் படுக்கை விரிப்பால் சுற்றி, காரில் எடுத்துச் சென்று தனங்கிளப்பு பற்றைக்காட்டுக்குள் வீசியுள்ளனர். சடலத்தைப் புதைக்க முயன்றும் மண்வெட்டி உடைந்ததால் அந்த முயற்சியைக் கைவிட்டுள்ளனர்.

​வீட்டிலிருந்த நகைகளைத் திருடிச் சென்று, அவற்றை அடகு வைத்த பணத்தில் திருகோணமலையில் வாடகைக்கு வீடு எடுத்து, பால் காய்ச்சி குடியேறித் தம்பதியாக வாழத் தொடங்கியுள்ளனர்.

விரிவுரையாளரின் ஏடிஎம் (ATM) அட்டை மூலம் கிளிநொச்சியில் பணம் எடுத்தது மற்றும் திருகோணமலையில் எரிபொருள் நிரப்ப முயன்ற போது மொபைல் போனுக்கு வந்த குறுஞ்செய்திகள் (SMS) மூலம் பொலிஸார் இவர்களைக் கண்காணித்துள்ளனர். இறுதியில் மொபைல் சிக்னல் மற்றும் புவியியல் இருப்பிடத்தை வைத்துத் திருகோணமலையில் வைத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.

சடலம் பிரேதப் பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட திவாகர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்பது மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இக்கொலைச் சம்பவம் யாழ்ப்பாணக் கல்விச் சமூகத்தினிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Quick Info
Full Details
Closing Date
Status
GIF

Post a Comment

0 Comments